ஊட்டி என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தள சீரமைப்பு பணி மந்தம்: இந்த கோடை சீசனுக்காவது தயாராகுமா?

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தள சீரமைப்பு  பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக மந்த கதியில் நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள் தோறும்  ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் 90  சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். தனியார் பஸ்கள் மற்றும் வேன்களில் வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்றவாறு பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தளத்தை பயன்படுத்தி வந்தனர். கூட்டுறவுத்துறை கட்டுபாட்டில் இப்பார்க்கிங் தளம் உள்ளது. இங்கு  சுமார் 100 பஸ்கள் வரை நிறுத்த முடியும். அதேசமயம், 200 வேன்கள் நிறுத்தும் வசதி உள்ளது.

இங்கு கட்டண அடிப்படையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ஆண்டு முழுக்க கூட்டுறவுத்துறைக்கு கணிசமான  வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த பார்க்கிங் தளத்தை மேம்படுத்தும் நோக்கில் கூட்டுறவுத்துறை சார்பில் கடந்த 2018ம் ஆண்டு ரூ.2  கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மண் தரையாக உள்ள பார்க்கிங் தளத்தை இன்டர்லாக் கற்கள் பதித்து சீரமைத்தல், கடைகள், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணிகள் துவக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை முழுமை பெறவில்லை. அதிகாரிகள்  மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஏற்கனவே இருந்த ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டு, வேறு ஒப்பந்ததாரர் தேர்வு  செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே நடந்து வருகிறது. பார்க்கிங் தளத்தில் பாதி  தூரத்திற்கு இன்டர்லாக் கற்கள் பொருத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள இடங்கள்  மண் தரையாகவே உள்ளது. குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட வசதிகளும்  ஏற்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு கோடை சீசன் போதும் பணிகள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாதி பணிகள் மட்டுமே  முடிந்துள்ள நிலையில், வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த கோடை சீசனுக்காவது பார்க்கிங் தளம் முழுமையாக தயராகுமா என பொதுமக்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இந்த பார்க்கிங் தளத்தின் ஒருபகுதியில் 30 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டுமான பணிகள்  முழுமையாக முடிவடையாத நிலையில், ஆளுங்கட்சியினர் கடை ஒதுக்கீடு செய்ய பேரம் பேசி வருவதாக கூறப்படுகிறது.

பார்க்கிங் பகுதியில் பெட்டி கடை வைத்திருந்த வியாபாரிகள், புதிய கடைகளுக்கான டெண்டரின் போது முன்னுரிமை அடிப்படையில் தங்களுக்கு கடை வேண்டும் என கேட்க வாய்ப்பு இருந்த நிலையில், அவர்களையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே என்.சி.எம்.எஸ். பார்க்கிங் தள சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், பார்க்கிங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளில் டெண்டர் விவகாரங்களிலும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: