பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம்; திமுக தலைவர் ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி உள்ளிட்டோர் மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அண்ணா நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்திய அரசியலில் தமிழ்நாடு எப்போதும் தனித்துவமாகவே இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் தேசிய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் போது தமிழ்நாடு மட்டும் தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாநில கட்சிகளுக்கு மட்டுமே ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளித்து வருகிறது. திராவிட இயக்கக் கொள்கைகள் இதற்கு முக்கியக் காரணம் என்றால் அதை பெரியார் வழியில் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அண்ணாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக பதவி வகித்த அண்ணா, ஆட்சியில் இருந்தது மிகக் குறைவான காலகட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு முக்கியத் திட்டங்களைத் தொடங்கி வைத்தவர் ஆவார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டியதே அண்ணா தான். இந்நிலையில் அவரின் 51ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

திமுக அமைதி பேரணி

திமுக சார்பில் இன்று காலை 8 மணியளவில் அண்ணா நினைவு தின அமைதிப்பேரணி  நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கிய அமைதிப் பேரணி கடற்கரை சாலை வழியாக மெரீனாவில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. பின்னர் அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் கலைஞர் நினைவிடத்திலும் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் : மு.க.ஸ்டாலின்

அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அண்ணாவின் குரல், கொள்கை, கோட்பாடு, வாழ்க்கை என்றும் நம்மை இயக்கி கொண்டு இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர், துணை முதல்வர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Related Stories: