மத்திய அரசு பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு பயனில்லை: விவசாய சங்க நிர்வாகிகள் கருத்து

சென்னை: ‘‘மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், நதிகள் இணைப்பு, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் போன்ற அறிவிப்புகள் இல்லாததால் தமிழகத்துக்கு பயனற்ற பட்ஜெட்’’ என்று விவசாய சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்க  பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன்:  பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. விவசாய உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவோ, சந்தை வசதியை உறுதிபடுத்துவதற்கான அறிவிப்புகளோ இடம் பெறாமல் 2022ல் விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும் என்பது காகிதப்பூ போன்றது. விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்பது விளம்பரத்துக்கு மட்டுமே உதவும். நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் 7 வட மாநிலங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக ரூ.16500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்தப் பயனுமில்லை. மேலும் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. ரூ.15 லட்சம் கோடி கடன் இலக்கு என்பது பயனற்றது. இது விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் ஆகும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு: இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடி. இதில் விவசாயிகள் 85 முதல் 90 கோடி வரை உள்ளோம். விவசாய வளர்ச்சிக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். இதில் ரூ.15 லட்சம் கோடி கடன் கொடுப்பதாக கூறப்பட்டுள்ளது. விவசாயி கடன் வாங்க வேண்டும், கடனில் சாக வேண்டுமா. விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை கொடுத்தால்தான் வாழ முடியும். இந்த பட்ஜெட்டில் நதிகளை இணைக்க நிதி ஒதுக்கவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக செய்ய வேண்டும் என நினைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் தராது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் (மா.கம்யூ): நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தங்களது கடன் தள்ளுபடி ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமாகா விவசாய அணி தலைவர் புலியூர் நாகராசன்: விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டிற்கு குறிப்பாக காவிரி டெல்டா விற்கு நடந்தாய் வாழிகாவிரி திட்டத்திற்கு ரூ.16800 கோடி நிதி, காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூ.7600 கோடி நிதி என எவ்வித அறிவுப்பும் இல்லை என்பது விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான் தருகிறது. தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தலைவர் விசுவநாதன்:  விவசாய கடன் தள்ளுபடி இல்லை. உரமானியம் குறித்த அறிவிப்பு இல்லை. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்படவில்லை. ஆக மொத்தம் மத்திய அரசின் 2020 பட்ஜெட், தமிழக விவசாயிகளுக்கு பெரிய அளவில் பயனளிக்க கூடிய பட்ஜெட்டாக இல்லை.

Related Stories: