சென்னையில் செயல்படும் அறிவுசார் சொத்து மேல்முறையீடு வாரியத்தை மாற்ற வேண்டாம்: மத்திய அரசுக்கு தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் அறிவுசார் சொத்து மேல்முறையீடு வாரியத்தை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. அறிவுசார் சொத்து மேல்முறையீடு வாரியம் கடந்த 2003 முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் சொத்துரிமை தொடர்பான ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரியத்தில் மேல் முறையீடு மற்றும் திருத்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு வந்தது. சமீப காலமாக இந்த வாரியத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது. இந்த நிலையில், மேல் முறையீட்டு வாரியத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதற்கு பல்வேறு வக்கீல் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த வாரியத்தை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யக் கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறும்போது,  மேல் முறையீடு வாரியம் சென்னையில் பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. இதனால், தமிழகம் மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் வழக்கறிஞர்களும், பொதுமக்களும் பயனடைந்து வருகிறார்கள். எனவே இந்த வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.  இந்த வாரியம் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டால் தமிழக மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories: