டெல்லியில் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டக்களத்தில் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிராக நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இன்றைய போராட்டத்தின் போது கபில் குஜ்ஜர் என்ற இளைஞர் வானத்தை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என்று கூறியபடி துப்பாக்கியால் சுட்டார். அந்த இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரை உடனே கைது செய்தோம், இந்த துப்பாக்கிச்சுட்டில்  யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று துணை காவல் ஆணையர் தெரிவித்தார்.

 டெல்லியில் இரண்டு நாட்களுக்கு முன்பு குடியுரிமை  திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழகம் அருகே மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் கோபால் என்ற இளைஞர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த அதிர்ச்சி மறைவதற்குள் டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

உடனே போலீசார் அந்த இளைஞரை வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மாலை 4.50 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. போலீசார் அந்த இளைஞரை பிடித்து இழுத்துச் சென்ற போது அவர், ‘இந்த நாட்டில் இந்துக்கள் மட்டுமே மேலானவர்கள்’ எனக் கத்தினார்.

விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கிழக்கு டெல்லியின் தல்லுபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் கபில் குஜ்ஜார் என்பதும் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியதாவது: திடீரென துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டது. அந்த நபர் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டார். அவர் இரண்டு முறை சுட்டார். போலீசார் அவருக்கு பின்னால்தான் நின்று கொண்டிருந்தனர். அவரது துப்பாக்கி ஜாம் ஆனதால் அங்கிருந்து ஓடினார்.

பின்னர், மீண்டும் சுட முயற்சித்தார். எங்களில் சிலரும், போலீசாரும் அவரை பிடித்தோம். போலீசார் அவரை பிடித்துக் கொண்டு சென்றனர்” என்றார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி சின்மய் பிஸ்வால் கூறுகையில், ‘அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மீண்டும் அவர் சுட முயன்ற போது நாங்கள் அவரை வளைத்து பிடித்துவிட்டோம்’  என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: