73வது நினைவுநாளையொட்டி மெரினாவில் காந்தி படத்துக்கு கவர்னர், முதல்வர் மரியாதை : தலைமை செயலகத்தில் தீண்டாமை உறுதிமொழி

சென்னை: காந்தியடிகளின் 73வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை, மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவ படத்துக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று காலை 10 மணிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதை தொடர்ந்து அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் க.சண்முகம், அதிகாரிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து காந்தி சிலை அருகே சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் வழிபாடு நிகழ்ச்சியில் கவர்னர், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர். சர்வோதயா சங்கத்தினர் சார்பில் முதியவர்கள் தாங்களே ராட்டையில் நூல் நூற்றனர். இது அங்கு வந்த அனைவரையும் கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள், காந்தியடிகளின் அகிம்சை கொள்கைகளை பின்பற்றுபவர்கள் உள்ளிட்ட பலர் காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், காந்தியடிகளின்  73வது நினைவு தினத்தை  முன்னிட்டு சென்னை கோட்டை ராணுவ மைதானத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட தலைமை செயலக அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை படிக்க ஊழியர்கள் அதை திரும்ப சொல்லி தீண்டாமையை கடைபிடிக்க மாட்டேன்’ என உறுதிமொழி எடுத்து கொண்டனர். காந்தியடிகளுக்கு  அஞ்சலி செலுத்தும்விதமாக போலீசார்  துப்பாக்கிகளை தலைகீழாக வைத்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: