மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம்: டெல்லி ராஜ்காட் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

டெல்லி: மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினமான இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ்  காந்தி 1869-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இந்தியாவின் விடுதலைக்காக  வித்திட்ட முக்கியத் தலைவர்களின் இவருடைய பெயர்தான்  முதன்மையாக உச்சரிக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் ‘விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை’ என  அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப்போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி  1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே நாளில் வல்லபாய் படேலுடன் பேசி முடித்த பிறகு, டெல்லியின் பிர்லா இல்லத்திலிருந்து பேரனின் மருமகளான அபா காந்தி மற்றும் கொள்ளுப் பேத்தி ஆகியவர்களின் துணையுடன் தோட்டத்தின்  வழியாக மாலைக் கூட்டுப் பிரார்த்தனைக்கு சென்று கொண்டிருந்த போது, ஒளிவு மறைவின்றி நாதுராம் கோட்சே வால் சுட்டுக்கொல்லப்பட்டது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு  நாளான இன்று தியாகிகள் தினமாக போற்றுகின்றனர்.

இந்நிலையில், மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர்  மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: