திருப்புவனம் மற்றும் தண்டராம்பட்டில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

சிவகங்கை: திருப்புவனம் மற்றும் தண்டராம்பட்டில் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு கடந்த 11ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் பல்வேறு இடங்களில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 335 இடங்களில் இன்று மறைமுக தேர்தலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர், ஓரு மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றிய தலைவர், 41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட மொத்தம் 335 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல் நடைபெறவிருந்தது. மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு காலை 10.30 மணிக்கும், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிகளுக்கு மாலை 3.30 மணிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முழுமையாக வீடியோ பதிவு செய்ய  வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைப்பு

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக இன்று நடைபெற இருந்த சிவகங்கை திருப்புவனம் ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதபோல், திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிகளுக்காக நடைபெறவிருந்த தேர்தல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: