அரியலூர், கள்ளக்குறிச்சியில் புதிய மருத்துவ கல்லூரிகள் : மத்திய அரசு அனுமதி

சென்னை: அரியலூர், கள்ளக்குறிச்சியில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகள் ஒரு பல் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஆண்டுக்கு 3,500 பேர் வரை சேர்கின்றனர். இந்நிலையில் நம் நாட்டில் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்ப போதுமான டாக்டர்கள் இல்லை. இதனால் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பலர் இறக்கின்றனர். இதனால் மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி வீதம் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் வரும் 2020-2021ம் கல்வியாண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ கல்லூரிகள் தொடங்க வேண்டிய மாவட்டங்கள் பட்டியல் மத்திய சுகாதாரத்துறைக்கு, தமிழக சுகாதாரத்துறை அனுப்பியிருந்தது.

அதன்படி தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது. அங்கு தற்போது கல்லூரிகள் அமைப்பதற்கான டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியது. காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. காஞ்சிபுரத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் இல்லாததால், சென்னை அல்லது வேலூருக்கு நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்ல வேண்டியுள்ளது. இதனால் வழியிலேயே உயிருக்கு ேபாராடும் நோயாளிகள் இறந்துள்ளனர். அதேபோல் கடலூரில் மருத்துவக்கல்லூரி இல்லாததால் நோயாளிகள் நாகப்பட்டினம் அல்லது புதுச்சேரிக்கு கொண்டுசெல்லும் நிலை உள்ளது. இதனால் அங்கும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒப்புதல் கேட்டிருந்த நிலையில், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மட்டும் இரு கல்லூரிகளுக்கு மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

Related Stories: