பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

சென்னை: பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட/பட்டியல் சமூக மக்களை பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அத்தகைய வன்முறைகள் குறித்து சுயேட்சையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும், சமூகம், கல்வி, பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் குடியுரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் தேசிய தாழ்த்தப்பட்டோர்/ பட்டியலினத்தோர் ஆணையம் நிறுவப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 338ன் படி 1952ஆம் ஆண்டு தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் அமைக்கப்பட்டது.

மதுரை மாவட்ட தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை சங்க தலைவர் செல்வக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பட்டியலினத்தோர் நல ஆணையத்தை கலைக்க உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சமி நில விவகாரத்தில் பட்டியலினத்தோர் நல ஆணையம் அரசியல் சார்புடன் நடந்துகொள்வதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி அளித்த முரசொலி நிலம் மீதான புகாரில் அரசியல் ஆதாயம் அடையும் வகையில் ஆணையம் விரைந்து செயல்படுவதாகவும், பாதிக்கப்பட்ட பட்டியலின மக்கள் தந்த புகாரில் நடவடிக்கை  எடுக்கப்படவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: