அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. தாமிரபரணி, வைகை குடிநீர் திட்டம் மூலம் நகரில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடிப்பதற்கு தனியார் மினரல் வாட்டர் நிறுவனங்களின் மூலம் நகர் முழுவதும் ஒரு குடம் தண்ணீர் 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். குடிப்பதற்கு பொதுமக்கள் இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையே அதிகம் வாங்குகின்றனர். இதனால் நகர் முழுவதும் 10க்கு மேற்பட்ட தனியார் டிராக்டர்கள் மூலம் குடிநீரை போட்டி போட்டு தெரு தெருவாக விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மக்கள் குடிநீருக்காக தினந்தோறும் அதிகம் விலை கொடுத்து வாங்கும் நிலையில் உள்ளனர். இதனால் அருப்புக்கோட்டை நகராட்சி மூலம் வாழவந்தம்மன் கோவில் தெரு, எஸ்பிகே பள்ளி ரோடு, நகராட்சி சுகாதார பிரிவு அலுவலகம், காந்தி மைதானம், பாரதி நகர், டெலிபோன் ரோடு, கொண்டலம்மள் கோவில் தெரு, தேவாடெக்ஸ் காலனி, அன்புநகர், ராமசாமிபுரம் காலனி, தும்பைக்குளம் கண்மாய், நேருநகர், கொண்டலம்மன் கோவில் தெரு, மகாளியம்மன் கோவில் தெரு, நேதாஜி ரோடு, பழைய பேருந்து நிலையம், பட்டாபிராமர் கோவில் தெரு, இளைஞர் சங்கம் தெரு உட்பட 20 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் நகராட்சி மூலம் 600 அடியில் போர்வெல் அமைத்து தரப்படும். இந்த இடத்தில் மினரல் வாட்டர் பிளாண்ட் அமைத்து சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்தும் வரை தனியார் ஒப்பந்ததாரரின் பணியாகும். 20லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் 7 ரூபாயும், 1 லிட்டர் 1 ரூபாய்க்கும் விற்பனை செய்ய நகராட்சி நிர்ணயம் செய்துள்ளது. அந்தந்த இடங்களில் அமைக்கப்படும் மினரல் சுத்திகரிப்பு நிலையங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.