இனி தண்ணீர் கிடையாது!...டெல்டா பகுதியில் அறுவடை நெருங்குவதால் இன்று மாலையுடன் மேட்டூர் அணையில் நீர்திறப்பு நிறுத்தம்

சேலம்: காவிரி டெல்டாவில் பாசனத்திற்கு தேவை குறைந்ததால் மேட்டூர் அணை நீர்திறப்பு இன்று மாலை நிறுத்தப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 169 நாட்கள், 150 டி.எம்.சி.,தண்ணீர் வழங்கிய நிலையில் இன்று மாலை நீர்திறப்பு நிறுத்தப்படுகிறது. கர்நாடகம் கடந்த ஆண்டு கூடுதலாக 85 டி.எம்.சி. வழங்கியதில், 29 டி.எம்.சி. உபரி நீர் பாசனத்திற்கு பயன்படுத்த இயலாமல் வெளியேற்றப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12 முதல் மறு ஆண்டு ஜனவரி 28 வரை நீர் திறப்பது வழக்கம்.

இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் தேவை, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 13-ம் தேதியன்று காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 101.22 அடியாகவும், நீர்இருப்பு 66.43 டி.எம்.சி., ஆகவும் இருந்தது.

பின்னர் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் 4 முறை அணை முழுகொள்ளளவான 120 அடியை எட்டியது. டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு தொடர்ந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீர் அறுவடை நெருங்குவதால் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 150 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே திறந்துவிட பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலையுடன் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மேட்டூர் அணை மூடப்படுகிறது.

தற்போதையே நிலை

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 310 கன அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102 அடியாக உள்ளது.

Related Stories: