மெரினாவை சீரமைக்கும் பணி அடுத்த வாரம் தொடக்கம் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை: மெரினாவை சீரமைக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பேச்சுவார்த்தை நடத்தி கருத்துகளை கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரையில் ஒன்று. இந்த கடற்கரைக்கு நாள்ேதாறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சுற்றுலா பணிகளும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் சுதேசி தர்ஷ்ன் திட்டத்தின் கீழ் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை மேம்படுத்த 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் மெரினா கடற்கரையில் கழிவறைகள், சர்வீஸ் சாலையில் அமர்ந்து கொண்டு கடற்கரையை கண்டு ரசிக்கும் வகையிலான இருக்கைகள், குடிநீர் வசதி, பகல் நேரத்தில் பொதுமக்கள் அமரும் வகையிலான நிழற்குடைகள், சோலார் விளக்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மற்றும் மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும், மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி கடைகள் அனைத்தும் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரே நேர்கோட்டில் வைக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கடந்த வாரம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவில், கடைகள் அமைக்க 27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கடைகளுக்கு வாடகையாக மாதம் 100 வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், கடைகளுக்கு குறைந்தபட்ச வாடகையாக மாதம் 5 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் 900 கடைகளுக்கு மேல் ஒரு கடை கூட அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அனைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி கருத்துகளை கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது: மெரினா கடற்கரையில் உள்ள 1300 கடைகளில் பலர் 10 ஆண்டுகளுக்கு மேல் கடைகள் வைத்துள்ளனர். பலர் பரம்பரை பரம்பரையாக கடைகளை நடத்திவருகின்றனர். இவற்றில் 900 பேருக்கு மட்டும் கடைகள் அளித்தால் மற்றவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள். கடையில் விற்பனை செய்யும் ஐஸ்கிரீம் விலையே 100 ரூபாய் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். வியாபாரிகள் ஒரு நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்கிதான் விற்பனை செய்கிறார்கள். அந்த 100 ரூபாயில் அதிகபட்சம் 5  முதல் 10 வரை அந்த வியாபாரிக்கு கிடைக்கும்.

மெரினா கடற்கரையில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டுமே வியாபாரம் நன்றாக இருக்கும். வார நாட்களின் குறைந்த அளவு வியாபாரம் மட்டுமே இருக்கும். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஒரு வியாபாரி மாத வாடகையாக 5000 எவ்வாறு செலுத்த முடியும்.

எனவே மெரினா கடற்கரை சீரமைப்பு செய்வது, கடைகளை குறைப்பது மற்றும் வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக வியாபாரிகளை அழைத்து பேசி கருத்துகளை கேட்ட பின்புதான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: