மதுரை அருகே கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஸ்கூலுக்கு 7 கி.மீ. தூரம் போகணும் அரசு பஸ் வசதி செஞ்சு தாங்க: 5ம் வகுப்பு மாணவியின் துணிச்சல் பேச்சு

மதுரை:  மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டீஸ்வரி தலைமையில் கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மீனாட்சிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரபள்ளம், பூசாரிபட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தங்களது கிராமங்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கிராமசபை கூட்டத்திற்கு மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 5ம் வகுப்பு மாணவியான சஹானா, தனது தோழிகளுடன் வந்திருந்தார். முதலில் பார்வையிடுவதற்காக வந்திருக்கலாமென அனைவரும் எண்ணியிருந்தனர்.

திடீரென்று மாணவி சஹா, ஊராட்சி மன்ற தலைவரை பார்த்து, ‘‘எங்க மீனாட்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், 7 கிமீ தொலைவில் உள்ள மாயாண்டிபட்டியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கிறாங்க... எங்களுக்கு பள்ளிக்கு செல்ல அரசு பஸ் வசதியில்லை. இதனால ரொம்ப கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு உடனடியாக அரசு பஸ் வசதி ஏற்பாடு செஞ்சு கொடுங்க...’’ என்றார். அவரது பேச்சு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறுமியின் துணிச்சலை, கிராமசபை கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் கைத்தட்டி பாராட்டி வரவேற்றனர்.

மீனாட்சிபுரம் ஊராட்சிக்குட்பட்ட மீனாட்சிபுரம், ஆரபள்ளம், பூசாரிபட்டி, பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், மாயாண்டிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காலையும், மாலையும் நடந்தே சென்று வருகின்றனர். வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் தினமும் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருவதாக கிராம சபை கூட்டத்தில் மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். கிராம சபை கூட்டத்தில் மாணவி சஹானாவில் துணிச்சல் பேச்சு, வாட்ஸப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Related Stories: