சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்து: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: சுகாதாரத்துறையை  பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது ஆபத்தானது. எனவே, இந்த முடிவை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் என்ற பொருளை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதி ஆணையத்தின் சுகாதாரத்துறைக்கான துணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. பெரு நிறுவனங்களின் வணிக நலன் கருதி செய்யப்பட்ட இந்த பரிந்துரை மிகவும் ஆபத்தானதாகும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையிலான நிதி உறவு, நிதிப்பகிர்வு முறையை வரையறை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 15வது நிதி ஆணையம், சுகாதாரத்துறை சீர்திருத்தங்கள் குறித்து பரிந்துரைக்க  எய்ம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரந்தீப் குலேரியா தலைமையில் துணைக்குழு ஒன்றை அமைத்தது.

அக்குழு அண்மையில் நிதி ஆணையத்திடம் தாக்கல் செய்த பரிந்துரை அறிக்கையில், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.  பொது சுகாதாரத்துறையை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமின்றி, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அரசு மற்றும் தனியார்துறை கூட்டு முயற்சியில் 3000-5000 மருத்துவமனைகளை அமைக்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இது அரசின் வளங்களை தனியாருக்கு வாரி வழங்கும் நோக்கம் கொண்டதாகும். நிதி ஆணையத் துணைக்குழுவில் இடம்பெற்ற 5 உறுப்பினர்களில்  இருவர் தனியார் மருத்துவமனை அதிபர்கள் எனும் நிலையில் இந்த பரிந்துரையை ஏற்கக் கூடாது. மாநில அரசுகளின் அதிகாரங்களை சுரண்டி, அவற்றை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற மத்திய அரசு முயல்வது மிகவும் தவறு.

எனவே, பொதுசுகாதாரத்தை பொதுப்பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற துணைக்குழுவின் பரிந்துரையை  மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளின் அதிகாரப்பகிர்வை வரையறுக்க புதிய ஆணையம் அமைப்பதுடன், அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் வேண்டும். இவ்வாறு ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: