9 மருத்துவ கல்லூரிகளின் பணிகளை கண்காணிக்க 4 சிறப்பு உபகோட்டம்: உதவி செயற்பொறியாளர் தலைமையில் 3 பேர் நியமனம்

சென்னை: முதல்வர் எடப்பாடி உத்தரவை தொடர்ந்து, 9 புதிய மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகளை கண்காணிக்க ஏதுவாக சிறப்பு உபகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 2020-21ம் நிதியாண்டில் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதில், தமிழக அரசு சார்பில் நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகை ஆகிய 9 மாவட்டங்களில் 3200 கோடி செலவில் புதிய மருத்துவக்கல்லூரி அமைக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் 900 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 9 மருத்துவ கல்லூரிகள் அமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த மாதம் முதல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த மருத்துவ கல்லூரி 18 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் மருத்துவ கட்டுமான பிரிவில் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கண்காணிக்க போதிய பொறியாளர்கள் இல்லை. எனவே, மருத்துவ கல்லூரிகள் கட்டுமான பணிகளை மட்டுமே கண்காணிக்க சிறப்பு உபகோட்டத்தை உருவாக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்பேரில், இந்த மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகளை கண்காணிக்க ஏதுவாக புதிதாக 4 சிறப்பு உபகோட்டங்களை உருவாக்கம் செய்து நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.இந்த சிறப்பு உப கோட்டங்களில் ஒரு உதவி செயற்பொறியாளர், 3  உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், புதிய மருத்துவ கல்லூரிகளின் கட்டுமான பணிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

Related Stories: