சீனாவில் அதிதீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்: இந்தியர்களின் உடல்நிலையை அங்குள்ள தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ட்விட்

டெல்லி: சீனாவில் உள்ள இந்தியர்களின் உடல்நிலையை அங்குள்ள தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் உள்ள சர்வதேச கடல் உணவு சந்தையில் சட்டவிரோதமாக கொண்டு வந்து விற்கப்படும் சுகாதாரமற்ற இறைச்சியிலிருந்து கொரோனா என்ற ஆட்கொல்லி வைரஸ் பரவியது. மனிதனிடமிருந்து மனிதர்களுக்கு சுவாசம் மூலம் பரவும் இந்த வைரசால், தீவிர காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் சுருண்டு விழுந்து பலியாகின்றனர். ஹூபேய் உள்ளிட்ட 25 மாகாணங்களில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இதன் காரணமாக,  ஹூபேயின் 13 நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்நோய்க்கு எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாததால், காய்ச்சல்  தீவிரமாகி மக்கள் இறந்து வருகின்றனர். நேற்று வரை பலி எண்ணிக்கை 41 ஆக இருந்த நிலையில் நேற்று 54 ஆக அதிகரித்தது. வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. 1,287 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 237 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம்  தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அங்குள்ள இந்தியர்களின் நிலைமை குறித்து தூதரகம் மூலம் கண்காணித்து வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; முதன்முதலாக வைரஸ் பரவிய ,வுஹான் நகரில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய தூதரகம் அந்த மாணவர்களிடம் தொடர்பில் இருப்பதாகவும் அவர்களை பாதுகாப்பான முறையில் தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தூதகரம் கூறியுள்ளார்.

Related Stories: