71-வது குடியரசு தினம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்... சென்னையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை

சென்னை: 71-வது குடியரசு தினத்தையொட்டி சென்னையில் தேசியக்கொடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றினார். குடியரசு தின விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே இன்று காலை 8 மணிக்கு தேசிய கொடியை கவர்னர் பன்வாரிலால்  புரோகித் ஏற்றி வைத்தார்.

அப்போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, தேசியக்கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விமானப்படை, கப்பல் படை, தரைப்படை வீரர்கள், ஆண் மற்றும் பெண் போலீசார், கமாண்டோ போலீசார், தீயணைப்பு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், என்சிசி மாணவர்கள் உள்ளிட்ட 48 படை  பிரிவினரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹத் ஏற்றார். அணிவகுப்பு முடிவடைந்ததும், வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

குடியரசு தின விருதுகள்:

வீர தீர செயலுக்கான அண்ணா விருது - தீயணைப்புப்படை ஓட்டுநர் ராஜாவுக்கு வழங்கப்பட்டது.

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது - மு. சாஜ் முகமதுக்கு அளிக்கப்பட்டது

காந்தியடிகர் காவலர் பதக்கம் - திருப்பூர் காவல் ஆய்வாளர் சந்திரமோகன் பெற்றுக் கொண்டார்.

விருதினை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Related Stories: