பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த கட்டமைப்பு, நிதி சீர்திருத்தங்கள் தேவை: l நிதிக் கொள்கை வரையறைக்கு உட்பட்டது: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் பேச்சு

புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றால் கட்டமைப்பு மற்றும் நிதி சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியம். அதேவேளையில் நிதிக் கொள்கை வரையறைக்கு உட்பட்டது என்று ரிசர்வ் வங்கி  கவர்னர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.புதுடெல்லியில் உள்ள பிரபலமான செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சக்தி காந்த தாஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் பொருளாதாரம் மந்தநிலையில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கிறது.  அதை வளர்ச்சிப் பாதைக்கு திருப்ப வேண்டும் என்றால் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். இதில் முன்னுரிமை அடிப்படையில் 5 துறைகளை மேம்படுத்த வேண்டும்.

 உணவு பதப்படுத்துதல் தொழில்  நிறுவனங்கள், சுற்றுலாத்துறை, இ-காமர்ஸ், தொழில்முனைவோரால் தொடங்கப்படும் புதிய தொழில்கள், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கை தொடரில் நாமும் ஓர் அங்கமாக இடம்பெற வேண்டும். இவற்றில் நாம்  கவனம் செலுத்தினால் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான திறன்கள் மத்திய வங்கிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. தேவை மற்றும் சப்ளை ஆகியவற்றின் தாக்கம் பணவீக்கத்தில்  எதிரொலிக்கிறது. இதற்காக அவ்வப்போது கொள்கைகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மத்திய வங்கிகள் எடுக்க வேண்டியது அவசியம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் கடன்  திட்டங்களை எளிமைப்படுத்த வேண்டியுள்ளது. இதுவும் ஓர் அளவுக்குதான் முடியும்.

பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை கட்டமைப்புகளை அரசு வலுப்படுத்த வேண்டும். அதற்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதில் மாநில அரசுகளுக்கும் பெரும் பங்கு உள்ளது. தொழில் துறை, வேளாண்மை ஆகியவற்றை  மேம்படுத்த வேண்டும் என்று சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இவரின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Related Stories: