முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் கையால் கதிர் அடிக்கும் விவசாயிகள்

முத்துப்பேட்டை, முத்துப்பேட்டை ஒன்றியத்தில் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதால், விவசாயிகள் கையால் கதிர் அடிக்கும் பணியை துவங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் 14 ஆயிரம் ஹெக்டர் சாகுபடி நிலம் உள்ளது. இதில் பரவலாக அணைத்து பகுதியிலும் சம்பா தாளடி சாகுபடி பரவலாக நடந்தது. இதில் நெற்பயிர்கள் செழுமை கண்டு இருந்த நேரத்தில் அப்பொழுது பெய்த கனமழையால் நீர் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சமீபத்தில் சாகுபடி பயிரில் இலைசுருட்டு புழு கூண்டுப்புழு உள்ளிட்ட பூச்சிநோய் தாக்குதல் பரவலாகி பயிர் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வருடம் புதியதாக சம்பா பயிரில் பரவலாக ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் ஏற்படுத்தியது. இதனால் பாதிப்புகள் இல்லாத பயிர்களை விவசாயிகள் இரவு பகலாக பல்வேறு கட்ட பாதுக்காப்பு மேற்கொண்டு வந்தனர். அப்படி பல்வேறு கட்ட பாதிப்புகளை கடந்து முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பரவலாக பயிர் வளர்ந்து செழிப்புடன் காணப்பட்டது.

இதில் பொங்கல் பண்டிகை நெருங்கிய நிலையில் இப்பகுதி விவசாயிகள் அறுவடை பணியை துவங்கினர். இதில் வயலின் முகப்பு பணியில் துவங்கிய அறுவடை பணிகள் அறுவடை இயந்திரம் பற்றாக்குறையால் பணிகள் குறைவாக நடந்து வந்தது. இந்தநிலையில் சமீபத்தில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்து வயலில் கிடக்கிறது. இதனால் நெல் மணிகள் உதிர்ந்து முளைத்துவிடும் நிலையில் உள்ளது. சில வயலில் பெய்த மழைநீர் தற்பொழுது வடிந்து இருந்தாலும் பல வயல்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் நீர் தேங்கி நிற்கிறது. இதனால் வறட்சியில் காய்ந்து வந்த விளை நிலங்கள் ஈரம் கண்டன. டயர் மிஷின் உதவியோடு அறுவடை செய்ய வேண்டியிருந்த வயல்கள் மழை உபயத்தில் சகதியானதால் பெல்ட் டைப் மிஷின்களை வயலில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒருவாரம் கடந்தால் தான் டயர் மிஷின்களை இலகுவாக வயலில் இறக்கி அறுவடையை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்நிலையில் விவசாயிகளின் தேவையை உணர்ந்து “கூட்டி கணக்கிட்ட” அறுவடை மிஷின் உரிமையாளர்கள் திடீரென வாடகையை உயர்த்தி அறிவித்தனர். இதனால் அறுவடைக்கு முன்வைத்த காலை பின்னெடுத்த விவசாயிகள் மிஷின்கள் வாடகை உயர்வு குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள், மிஷின் உரிமையாளர்கள், விவசாய அமைப்பு பிரதிநிதிகள் ஒன்றுகூடி கலந்து வாடகை நிர்ணயம் குறித்து அலசி ஆராய்ந்து இறுதியாக வாடகை குறித்து உறுதி செய்யப்பட்டது. அதன்படி பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை மிஷின்களுக்கு ஒருமணி நேர வாடகையாக ரூ.2 ஆயிரம் எனவும், டயர் டைப் அறுவடை மிஷின்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூ.ஆயிரத்து 450 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் மிஷின் உரிமையாளர்கள் விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வேளாண்மை பொறியியல் துறை அறுவடை மிஷின்களுக்கும் வாடகை நிர்ணயம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்ட் டைப்பிற்கு ஒரு மணிநேர வாடகையாக ரூ.ஆயிரத்து 415எனவும், டயர் டைப் அறுவடை மிஷின்களுக்கு ஒரு மணிக்கு ரூ.875 எனவும் வாடகை நிர்ணயம் செய்து உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முத்துப்பேட்டை ஒன்றியத்தில் ஈரம் காய்ந்த நிலங்களில் பரவலாக அறுவடை தொடங்கியுள்ளது. மழையால் சேறுகண்ட வயல்களில் அறுவடை தொடங்கப்பட்டுள்ளதால் பெல்ட் டைப் செயின் டைப் மிஷின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உட்பட வெளி மாநிலஙகளில் இருந்து வரும் அறுவடை மிஷின்களுக்காக காத்திருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இருப்பினும் மனம் தளராத பல விவசாயிகள் பொறுமையிழந்து பழைய முறைக்கு மாறி தார்ப்பாயில் கல்வைத்து கையால் கதிர் அடித்து வருகின்றனர். அதேபோல் மிஷின் தற்பொழுது நிலைக்கு உள்ளே வர வாய்ப்பில்லை என்ற நிலையில் இருக்கும் விவசாயிகளும் கூலி ஆட்களை கொண்டு கையால் அடித்து வருகின்றனர்.

Related Stories: