செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாலப்பாக்கம் ஊராட்சியை முன்மாதிரி கிராமமாக்க தேர்வு: தென் சென்னை எம்.பி தத்தெடுத்தார்

வேளச்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சியை சான்சத் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின் கீழ், முன்மாதிரி கிராமமாக்க, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்வு செய்துள்ளார்.       இதற்கான தொடக்க விழா மற்றும் ஆலோசனை கூட்டம் சித்தாலப்பாக்கம் ஊராட்சி சமூக நலக்கூடத்தில்   நடந்தது.  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமை வகித்தார். தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.  பின்னர், முன்மாதிரி கிராமமாக்க தேர்வு செய்யப்பட்ட பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

 இதையடுத்து தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி பேசுகையில், ‘முன்மாதிரி கிராம திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட சித்தாலப்பாக்கம் ஊராட்சி அனைத்து ஊராட்சிகளுக்கும் முன்மாதிரி கிராமமாக திகழும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

குறிப்பாக கிராமத்தில் இயற்கை சூழல் ஏற்படுத்துதல், சுகாதாரம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் கல்வி, உட்கட்டமைப்புகளை ஏற்படுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.  எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் திறந்தவெளி கிணறு மற்றும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட தேவையான நிதி முழுவதும் வழங்கப்படும்’ என்றார். முன்னதாக ஊராட்சி பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ஸ்ரீதர், உதவி திட்ட அலுவலர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சிவ கலைச்செல்வன், பரங்கிமலை ஒன்றிய திமுக செயலாளர் ப.ரவி, அவை தலைவர் எஸ்.ரவி, பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. மூர்த்தி,     ஊராட்சி கழக செயலாளர்கள் ரங்கநாதன், ராஜேந்திரன், மனோநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: