தபால் துறை அலுவலகங்களின் சர்வர் பழுது பல மாவட்டங்களில் அஞ்சல் சேவைகள் முடங்கின: பொதுமக்கள் கடும் அவதி

நெல்லை: நாடு முழுவதும் தபால் அலுவலகங்களில் சர்வர் பழுது காரணமாக சேமிப்பு கணக்குகளில் இருந்து பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் திண்டாடினர். மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் காகிதமில்லா பரிவர்த்தனை நடைமுறையில் உள்ளது. நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் கோர் பேங்கிங் சிஸ்டத்தில் மெயின் சர்வருடன் இணைக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தபால்துறையிலும் பணசேவைக்கு தற்போது ஏடிஎம் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்கள் பணத்தை பெற்று வருகின்றனர். தபால் துறையின் கணினி சேவையானது மைசூரை மையமாக கொண்டு சர்வரில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வரில் அடிக்கடி நிகழும் பிரச்னைகள் காரணமாக தபால் சேவை சில சமயங்களில் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சர்வர் பழுதால் நாடு முழுவதும் தபால் அலுவலகங்களில் வாடிக்கையாளர் சேவைகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சேமிப்பு கணக்கில் இருந்து பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், மாதாந்திர சேமிப்பு கணக்கில் பணம் செலுத்துதல், ஓய்வூதியம் பெறும் முதியோர் பணம் எடுத்தல் உள்ளிட்ட பல சேவைகள் முடங்கின.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை பொறுத்தவரை சுமார் 330 தபால் அலுவலகங்கள் உள்ளன. நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி ஆகிய 3 கோட்டங்களுக்கு உட்பட்ட தபால் நிலையங்களில் சர்வர் பழுது காரணமாக அஞ்சல் எழுத்தர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர். பொதுமக்கள் அடிக்கடி தபால் அலுவலகங்களுக்கு வந்து ‘சர்வர் எப்போது சரியாகும்’ என கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தனர். மாதாந்திர வட்டி மற்றும் பணம் செலுத்த வந்த சிலர் அங்கேயே நீண்ட நேரம் காத்திருந்து திரும்பி சென்றனர். நெல்லை கோட்ட தபால் நிலையங்களில் பணம் கட்ட வந்த சிறுசேமிப்பு முகவர்களும் திண்டாடினர். போஸ்டல் இன்சூரன்ஸ், பார்சல் புக்கிங் உள்ளிட்ட சேவைகளும் ஓரளவுக்கு பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து தபால் ஊழியர்கள் கூறுகையில், ‘‘தபால் துறை கோர் பேங்கிங் அடிப்படையில் சர்வர் இணைக்கப்பட்ட நாளில் இருந்தே பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன. சர்வர் ஆமை வேகத்தில் இருப்பதால் சில சமயங்களில் பணிகளை விரைந்து முடிக்க முடிவதில்லை. ஒரு தபால் அலுவலகத்தில் 4 ஆயிரம் கணக்குகள் என அதிகாரிகள் கொடுக்கும் பட்டியல் அடிப்படையில் நெட் ஸ்பீடை செயல்படுத்துகின்றனர். ஆனால் ஓராண்டில் அதே தபால் அலுவலகத்தில் கூடுதலாக ஆயிரம் கணக்குகள் இணையும்போது, அதற்கேற்ப சர்வர் வடிவமைக்கப்பட வேண்டும். ரேம் ஸ்பீடு இல்லாததால் சில நேரங்களில் எங்கள் பணிகள் சோர்வடைகின்றன. வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்’’ என்றனர்.

Related Stories: