திருவண்ணாமலையில் மகளிர் சாதனை கண்காட்சி: வாய்ப்பை முறையாக பயன்படுத்தினால் வெற்றி பெறுவது நிச்சயம்

திருவண்ணாமலை: கிடைக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்தினால் வெற்றி பெறுவது நிச்சயம் என திருவண்ணாமலையில் நடந்த மகளிர் சாதனை கண்காட்சியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசினார். திருவண்ணாமலையில் நேற்று ‘பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ எனும் மத்திய அரசு திட்டத்தின் சார்பில், விளையாட்டு, கலை, சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள், பள்ளி மாணவிகள் பங்கேற்ற ‘மகளிர் சாதனை கண்காட்சி’ நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் ச.அருள்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி, துணை ஆட்சியர்(பயிற்சி) மந்தாகினி முன்னிலை வகித்தனர்.

கண்காட்சியை திறந்து வைத்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது: வாழ்க்கையில் முன்னேற கல்வி மிக முக்கியம். அதே நேரத்தில், தங்களிடம் உள்ள தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதில் தனித்தன்மை மிக்கவர்களாக சாதிப்பது அவசியம். பல்வேறு துறைகளில் வெற்றி பெற்ற அனைவரும், எளிதில் அந்த வெற்றியை அடைந்ததில்லை. கடும் முயற்சியும், தொடர் பயிற்சியும், இலக்கை அடைய வேண்டும் என்ற எண்ணமும்தான் வெற்றியை நோக்கி நம்மை நடத்திச் ெசல்லும். ஐஏஎஸ் போன்ற உயர்பணிக்கான நேர்முகத் தேர்வுகளில், நம்முடைய தோற்றம், நடவடிக்கை, செயல்பாடுகள்கூட மிக நுட்பமாக கவனிக்கப்படுகிறது. எனவே, நம்முடைய நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாய்ப்பை நழுவ விட்டால் மீண்டும் பெறவே முடியாது.

பெண்கள் முன்னின்று நிர்வகிக்கும் துறைகளில் சிறப்பும், வெற்றியும் கூடுதலாக இருக்கும். எனவே, பெண்கள் அனைவரும் தயக்கத்தை விட்டுவிட்டு, வெற்றியை நோக்கி பயணப்பட வேண்டும். ஒரே நாளில் வெற்றிகள் நமக்கு கிடைக்காது. சோர்வடையாமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். நம்முடைய மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை எல்லாம் ஒருங்கிணைத்து, இதுபோன்ற கண்காட்சி நடத்துவதன் மூலம், மற்றவர்களுக்கு அது ஊக்கமும், உற்சாகமும், நம்பிக்கையையும் அளிக்கும் என நம்புகிேறன். இவ்வாறு அவர் பேசினார்.

மகளிர் சாதனை கண்காட்சியில், இரண்டரை வயது சிறுமி லட்சனா, சாதனைப் பெண்களின் பெயர்களை தெரிவித்து அசத்தினார். அதேபோல், இரண்டு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் திறன், ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டுள்ள பெண், தேசிய, மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவர்கள் ஆகியோர் கண்காட்சியில் தங்கள் அனுபவங்களை தெரிவித்தனர். இதில், பள்ளி துணை ஆய்வாளர் குமார், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ரேணுகோபால், மீனாட்சிசுந்தரம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: