சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு சென்னையில் துவங்கியது

* 16 வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன

* சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் திரும்ப பெறவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்கவும் தீர்மானம்

சென்னை: சிஐடியு 16 வது அகில இந்திய மாநாடு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த மாநாட்டில் சமாதானத்தை போற்றும் வகையில் 16 வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் திரும்ப பெறவும், ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சிஐடியு 16வது அகில இந்திய மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த மாநாட்டில் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதி மாநிலச் செயலாளர் ஜெயபால் தலைமையில் தஞ்சை கீழ்வெண்மணியிலிருந்து கொண்டுவரப்பட்ட கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு ஜோதியை மாநிலத் தலைவர் சவுந்தரராசன் பெற்றுக்கொண்டார். அதைப்போன்று புதுச்சேரி தியாகிகள் நினைவு ஜோதி, பொன்மலை தியாகிகள் நினைவு ஜோதி, சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு ஜோதி, வி.பி.சிந்தர் நினைவு ஜோதி, ஹேமச்சந்திரன் நினைவு, லீலாவதி நினைவு ஜோதி என பல்வேறு பகுதிகளில் இருந்து நினைவு ேஜாதி மாநாடு நடைபெறும் இடத்திற்கு எடுத்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து அகில இந்தியத் தலைவர் ஹேமலதா மாநாட்டு செங்கொடியை ஏற்றினார். சமாதானத்தை போற்றும் வகையிலும் 16வது மாநாட்டை குறிக்கும் வகையிலும் 16 வெண்புறாக்கள் வானில் பறக்கவிடப்பட்டது. பல வண்ணங்களில் பலுன் பறக்கவிடப்பட்டது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினைவு தூணில் தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து மாநாட்டிற்கு வந்தவர்களை 50 குழந்தைகளும், 50 பெண்களும் ரோஜா கொத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அகில இந்தியத் தலைவர் ஹேமலதா தலைமையில் அகில இந்திய மாநாடு துவங்கியது. தமிழக மாநில தலைவர் சவுந்தரராசன் வரவேற்றார். உலக தொழிற்சங்க சம்மேளன தலைவர் மாவண்டில் மக்வாய்பா வாழ்த்திப்பேசினார்.

மேலும் முருகேசன் (ஐஎன்டியுசி), ஏஐடியுசி பொதுச் செயலாளார் அமர்ஜித்கவுர், எச்எம்எஸ் தலைவர் ராஜாஸ்ரீதர், ஏஐயுடியுசி தலைவர் ராதாகிருஷ்ணன், டியுசிசி துணைத் தலைவர் கதிரவன், ஏஐசிசிடியு துணைத் தலைவர் சங்கர், யுடியுசி பொதுச் செயலாளர் அசோக் கோஷ், சோனியாஜார்ஜ் (எஸ்பிடபல்யுஏ), தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினர். மேலும் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன அதில் தேசிய குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நிராகரிக்க கோரியும், காஷ்மீரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் மாநில தலைவர் சவுந்தரராசன் நிருபர்களிடம் கூறியதாவது: சிஐடியு அகில இந்திய 16வது மாநாடு சென்னையில் (நேற்று) 23ம் தேதி முதல் 27 வரை நடைபெறுகிறது.

இந்த மாநாடு கொடியேற்றத்துடன் மிகச் சிறப்பாக தொடங்கி இருக்கிறது. இந்தியாவின் 10 மத்திய தொழிற்சங்கங்கள் அதனுடைய தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு வருகை தந்து நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டிய அவசியத்தையும் ஒருவர் போராட்டத்திற்கு ஒருவர் துணை நிற்பது அவசியத்தையும் வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இந்த மாநாட்டில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்பிஆர்க்கு ஒத்துழைக்க மாட்டோம் என்ற அறைகூவலை பிரதானமாக இருக்கும். உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித போராட்டம் நடத்தினாலும் அதை திரும்பப் பெற மாட்டோம் என்று கூறியிருக்கிறார். பதிலுக்கு நாங்கள் கூறுகிறோம் எந்த கேள்விக்கும் பதில் அளிக்க மாட்டோம். இதற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவோம் என்று கூறுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: