பொங்கல் முடிந்து ஒரு வாரம் மேலான நிலையில் கோயில் பணியாளர்களுக்கான போனஸ் எங்கே?

* ஊழியர்கள் அதிருப்தி

* கமிஷனர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: பொங்கல் பண்டிகை முடிந்து ஒரு வாரத்துக்கு மேலான நிலையில் தற்போது வரை கோயில் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. இதனால், கோயில் பணியாளர்கள் மத்தியில் போனஸ் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44,124 கோயில்கள் உள்ளது. இதில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இக்கோயில்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர்கள் உள்ளனர். இந்த பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ₹1000 போனஸ் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க கடந்த ஜன.7ம் தேதி கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டார். அதில், முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும். இந்த போனஸ் பெற 240 நாட்களுக்கு மேல் பணிபுரிந்து இருக்க வேண்டும். இந்த போனஸ் தொகையை பொங்கலுக்கு முன் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, அந்தெந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். மாறாக, ஒரு சில கோயில்களில் மட்டும் பொங்கல் போனஸ் வழங்கப்பட்டது.

ஆனால், பெரும்பாலான கோயில்களில் மற்ற பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போது, பொங்கல் முடிந்து ஒரு வாரம் ஆன நிலையில், தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களுக்கு கமிஷனர் அறிவித்த பொங்கல் போனஸ் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து கோயில் பணியாளர்கள் கூறுகையில், கோயில்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 7ம் தேதி வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இந்த நாள் வரை வழங்கப்படவில்லை. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் அலுவலக பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ச்சகர், காவலர், இசை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்களுக்கு வழங்கப்படவில்லை. இதே போன்று தான் தமிழகத்தின் மற்ற கோயில்களிலும் வழங்கப்பவில்லை. இந்த விவகாரத்தில் கமிஷனர் பணீந்திர ரெட்டி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: