வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா?: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து உள்ளிட்ட வழக்குகளில் நாளை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான 2019-2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி நடைபெற்றது. இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர்  சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமீன் உள்ளிட்டோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டதால் நடிகர் சங்க  தேர்தல் வாக்குகள் எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது. இந்த வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விஷால் தரப்பு வழக்கறிஞர் ‘நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய முடியாது. சங்க விதிகளின்படி உறுப்பினர்களை நீக்கவும், மாற்றவும்  செயற்குழுவுக்கு அதிகாரம் உள்ளது நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்று வாதிட்டார். மேலும், நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். இந்த  விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால்  சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்கத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி நியமனத்தை எதிர்த்து அச்சங்கத்தின் பதவிக் காலம் முடிவடைந்த நிர்வாகிகள் வழக்கு தொடர முடியாது என தமிழக  அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்களிடம் விளக்கம் பெற்ற பிறகே சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இதையடுத்து நடிகர் சங்க தேர்தல் வழக்குகளில் முடிவு எட்டும் வரையோ அல்லது ஓர் ஆண்டிற்கோ சிறப்பு அதிகாரியை நியமிப்பது  என அரசு உத்தரவிட்டது. எனவே நடிகர் கார்த்தி மற்றும் நாசர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்குகளின்  தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 2019 நவம்பர் மாதம் தள்ளி வைத்தார்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கல்யாண சுந்தரம் தீர்ப்பளிக்கிறார். நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு எதிராக நடிகர் விஷால்  வழக்கு தொடர்ந்தார். நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது என அறிவிக்கக் கோரி சங்க உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி வழக்கு தொடர்ந்தனர் ஆகிய வழக்குகளில்  தீர்ப்பு வழங்கவுள்ளது. நீதிமன்ற தீர்பை பொருத்து நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்பது நாளை தெரியவரும். நாளை வரவுள்ள தீர்ப்பை எதிர்பார்த்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் உள்ளனர்.

Related Stories: