கொரட்டூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் அவதி

* பயணிகள் குற்றச்சாட்டு

* அதிகாரிகள் அலட்சியம்

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தினமும் அவதிப்பட்டு வருவதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மாநகர பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் நிலையம் பல ஆண்டாக எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தது. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அப்போதைய அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வேதாசலம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து கொரட்டூர் பேருந்து நிலையம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து வசதிகளுடன் கட்டி திறக்கப்பட்டது.

இந்த பஸ் நிலையத்தை சரிவர பராமரிக்காமல் கைவிட்டதால் தற்போது பல்வேறு பிரச்னைகளால் பயணிகள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘பஸ் நிலையத்தின் மேற்கூரை பல இடங்களில் உடைந்து கிடக்கிறது. இதனால், லேசான மழை பெய்தால் பஸ் நிலையத்தில் தண்ணீர் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி போல் ஒழுகுகிறது. இதனால், பயணிகள் பஸ் நிலையத்தில் நிற்க முடியாமல் பஸ் நிலையத்தை சுற்றிலும் உள்ள கடைகளில் ஒதுங்கி நிற்கின்றனர். இதோடு மட்டுமில்லாமல், இங்குள்ள கழிவறைகளில் மின்விளக்குகள் இல்லை.

அங்கு சரியாக பராமரிப்பின்றி இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பாலூட்டும் அறையில் மின்விசிறி இன்றியும், விளக்குகள் எரியாமலும் உள்ளன. இதனால், பெண்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பஸ் நிலையத்தில் தனியார் வாகனங்கள் அடிக்கடி நிறுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. இதோடு மட்டுமல்லாமல் பஸ் நிலையத்தில் பயணிகள் குடிப்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இதனை பயன்படுத்தி பயணிகள் சுத்தமான குடிநீரை அருந்தி வந்தனர்.

இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் சரியான பராமரிப்பின்றி ஒரு சில மாதத்திலேயே பழுதானது. அதன் பிறகு, இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையத்தை சீரமைக்காமல் கைவிட்டனர். இதனால், பல லட்சம் செலவில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயணிகளுக்கு பயன்படாமல் பூட்டி கிடக்கிறது. இதனால், பயணிகள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கொரட்டூர் பஸ் நிலையத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: