வடசென்னை அனல் மின் நிலையத்தில் திருவோடு ஏந்தி ஊழியர்கள் போராட்டம்: நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

சென்னை: மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் நிலக்கரி எரியூட்டப்பட்டு 1830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிரந்தர பணியாளர்களாகவும், 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இங்கு பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள் அனல் மின் நிலைய வாயிலில் நேற்று திருவோடு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘தொழிலாளர்கள் பொது சேம நல நிதி, விடுப்பு சரண்டர் செய்து வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படவில்லை. எங்களது சேமிப்பு பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்க நிர்வாகம் மறுக்கிறது’’ என்று குற்றம்சாட்டி கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. எனவே சிறிது நேரம் கழித்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘எங்களது குடும்பத்தில் திருமண செலவு, மருத்துவ தேவை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக விண்ணப்பித்துள்ள தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாகியும் நிதி வழங்கப்படவில்லை. ஆண்டிற்கு ரூ.2,500 கோடி வருமானம் ஈட்டி வந்த அனல் மின் நிலையம் அரசின் தவறான நிர்வாக மேலாண்மையால் சிதைந்து உள்ளது. தொழிலாளர்கள் பொது சேம நல நிதி, விடுப்பு சரண்டர் செய்து வழங்க வேண்டிய நிதி உள்ளிட்டவை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படவில்லை. எங்களது சேமிப்பு பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்க நிர்வாகம் மறுக்கிறது. எனவே அரசு உடனடியாக தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர்.

Related Stories: