குடியரசு தின விழாவுக்கான 2ம் கட்ட ஒத்திகை: பார்வையாளர்களை கவரும் வகையில் கண் கவரும் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள்

சென்னை: 71வது குடியரசு தின விழாவுக்கான 2ம் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது. இதில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு, பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியானது நடைபெற்றது. 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார். இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கடற்கரையில் நடைபெற்று வருகிறது. தேசிய கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹோலிகாப்டர்கள் அணிவகுத்து சென்றன. ஒத்திகை நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சரின் வாகன ஒத்திகை நடைபெற்றது. இதையடுத்து தேசிய கீதம் இசைக்க இந்திய விமானப்படை அதிகாரிகள் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார்கள்.

காவல்துறை, கடலோர காவல்படை, தேசிய மாணவர் படை, விமானப்படை, குதிரைப்படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின்  பிரமாண்ட அணிவகுப்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து, காவல்துறையினரின் மோட்டார் வாகன சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தேசிய ஒருமைப்பாட்டை உணர்த்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பிற மாநிலத்தவரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.  ஒத்திகையில் காரணமாக சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவு சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை இறுதிக் கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Related Stories: