சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆன நடிகர் ரஜினி: #மன்னிப்பு_கேட்க_முடியாது ஹேஷ்டேக் உலகளவில் டுவிட்டரில் முதலிடம்

சென்னை: நடிகர் ரஜினி காந்தின் இன்றைய பேட்டியை தொடர்ந்து பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ரஜினி குறித்த  ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகிறது. சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசும்போது,  1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த திராவிடர் கழக ஊர்வலத்தில் ராமர், சீதை படத்தை ஆடையில்லாமல் கொண்டு வந்ததாகவும், செருப்பு மாலை  போட்டதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டிருந்தார். இதற்கு திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரஜினிகாந்த் பேசியதற்கு எதிராக பல்வேறு  ஊர்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும்போது, ‘விழாவில் இல்லாததை நான்  சொல்லவில்லை. நடந்ததைத்தான் சொல்லி யிருக்கிறேன். நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 1971ம் ஆண்டு  சேலத்தில் நடந்த ஊர்வலம் பற்றி கற்பனையாக எதுவும் பேசவில்லை.

பத்திரிகையில் வெளியான செய்தியைதான் பேசினேன். அவுட்லுக் இதுகுறித்து செய்தி வந்திருக்கிறது. ராமர், சீதை சிலைக்கு செருப்பு மாலை  அணிவித்து ஊர்வலத்தில் கொண்டு வந்தார்கள். இதை தர்ணா செய்த லட்சுமணன் சார் உண்மை என்று சொல்லியிருக்கிறார். இதை பேசியதற்காக  மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். ஸாரி, நான் மன்னிப்பு கேட்க முடியாது. வருத்தம் தெரிவிக்க முடியாது என்பதை தாழ்மையுடன்   தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

இந்நிலையில், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.  #Rajinikanth, # மன்னிப்பு_கேட்க_முடியாது, #ரஜினிகாந்த், #சூப்பர்சங்கிரஜினி உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகியுள்ளன. இதில்  ஏராளமானோர் ரஜினிக்கு ஆதரவாகவும், புகழ்ந்தும், மற்றவர்கள் விமர்சித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற  ஹேஷ்டேக் டுவிட்டரில் உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: