கேரள மாநிலத்தை பின்பற்றி தமிழக கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி : தொழிலாளர் நலத்துறை அரசுக்கு பரிந்துரை

சென்னை: தமிழகத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் துணிக்கடைகள், திரையரங்குகள், அங்காடிகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் நின்று கொண்டே வேலை செய்கின்றனர். இது உடல்நலம் மற்றும் மனரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், கேரளாவை போல் தமிழகத்திலும் கடைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் அமர இருக்கை வசதி செய்து தருவது தொடர்பாக சட்டதிருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாக பிரிவு கூடுதல் தொழிலாளர் ஆணையர் கடந்த செப்டம்பர் மாதம் தொழிலாளர் ஆலோசனை வாரியக் கூட்டத்தில் கருத்துரு வைத்தார். இதுதொடர்பான விவாதத்தில் மின்சார வாரியம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள், வேலையளிப்பவர்களின் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சார்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

இந்த விவாதத்தில் தொடர்ச்சியாக நின்று கொண்டே பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பணிக்கு பாதிப்பு இல்லாத வகையில் பணியிடத்தில் அமர்ந்து கொள்ளும் வகையில் கேரள மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை ேபான்று தமிழ்நாடு  கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய பரிந்துரை செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய தொழிலாளர் நலத்துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது :

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உடல் மற்றும் பணியிட பாதுகாப்பினை அளித்திட்ட கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947ல் ஐந்து வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிரிவு 21ல் தொழிலாளர் பணிபுரியும் இடங்களை சுத்தமாக வைத்திருத்தல், 21வது பிரிவில் காற்று வசதி செய்தல், 22வது பிரிவில் ஒளி வசதி செய்தல், 23வது பிரிவில் தீ விபத்துக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் ஆகியவை தொடர்பாக சட்டப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தொழிலாளர் அமரும் வகையில் சட்டதிருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு தமிழக அரசு இரண்டு மாதத்திற்குள் சட்டத்திருத்தம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: