கழிவுநீர் தொட்டியில் வெல்டிங் அடிக்கும் போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளிகள் பலி

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட ரெட்டிபாளையம், ஐஸ்வந்த் நகரில் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்திற்கு கழிவுநீர் அகற்றும் நிலையம் உள்ளது. இங்கு உள்ள கழிவு நீர் தொட்டிக்கு இரும்பிலான மேல் மூடி அமைக்கும் பணி நேற்று மதியம் நடந்தது. இந்த பணியில் நொளம்பூர் சார்ந்த கான்ட்ராக்டர் சுரேஷ் தலைமையில் பாடி, என்.எஸ்.கே தெருவைச் சார்ந்த கண்ணன் (45), கொளத்தூர், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (24) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

Advertising
Advertising

ஆறு மீட்டர் ஆழமுள்ள தொட்டிக்கு மேல் நின்று கண்ணன், பிரகாஷ் இருவரும் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென்று பிரகாஷ் கால் தவறி கழிவுநீர் தொட்டியில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற கண்ணன் கயிறு கட்டி கழிவுநீர் தொட்டியில் இறங்கி உள்ளார். அப்போது விஷவாயு தாக்கி உள்ளது. இதில், இருவரும் மயங்கி உள்ளே விழுந்தனர். இதனை பார்த்த கான்ட்ராக்டர் சுரேஷ் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதன்பிறகு, அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்களும், நொளம்பூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி கண்ணன், பிரகாஷ் இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு, போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இருவரும் வரும் வழியிலேயே கண்ணன், பிரகாஷ் இருவரும் இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் நடந்த பகுதி அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் எல்லைக்கு உட்பட்டது. இதனையடுத்து புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து காண்ட்ராக்டர் சுரேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: