இந்திய பொருளாதார வளர்ச்சி4.8 சதவீதமாக குறைப்பு: ஐஎம்எப் கணிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.1 சதவீதத்தில் இருந்து 4.8 சதவீதமாக சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) குறைத்துள்ளது.  இந்திய பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில் உள்ளது. இதை மீட்டெடுக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டாலும், தொழில்துறைகள் முடங்கி கிடக்கின்றன. இதனால், ரிசர்வ் வங்கி மட்டுமின்றி பல்வேறு நிதியமைப்புகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்து வருகின்றன. கடந்த வாரம் ஐநா அமைப்பு பொருளாதார வளர்ச்சியை குறைத்திருந்தது. இதுபோல், சர்வதேச நிதியமும் (ஐஎம்எப்) இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை குறைத்துள்ளது. நடப்பு நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என கடந்த ஆண்டு அக்டோபரில் சர்வதேச நிதியம் தெரிவித்திருந்தது. இது 4.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், நேற்று வெளியிட்ட உலக பொருளாதார நிலை தொடர்பான அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.  

இதற்கு பொருளாதார மந்தநிலையே முக்கிய காரணம். எதிர்பார்த்ததைவிட மந்த நிலை மிக மோசமாக உள்ளது. அதோடு, வங்கி சாரா நிதி நிறுவனங்களிடம் கடன் தேவை மற்றும் உள்நாட்டில் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.  இதுபோல் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக இருக்கும். இது ஏற்கெனவே இருந்த மதிப்பீட்டை விட 0.9 சதவீதம் குறைவு. 2021-22 ல் இது 6.5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது.  உலக பொருளாதார வளர்ச்சியையும் ஏற்கெனவே இருந்த மதிப்பீட்டை விட ஒரு சதவீதம் வரை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.

Related Stories: