தனியார் பால் விலை லிட்டருக்கு 4 உயர்வு இன்று முதல் அமல்: டீ, காபி, தயிர் விலை விரைவில் உயரும் வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் அதிர்ச்சி

சென்னை: தனியார் பால் விலை இன்று முதல் 4 உயர்த்தப்படுகிறது. இதனால் டீ, காபி பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த பால் விற்பனையில் 84 சதவீதம் தனியார் பால் நிறுவனங்களும் 16 சதவீதம் அரசின் ஆவின் பால் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. தனியார் பால் நிறுவனங்கள் கடந்த ஆண்டு 3 முறை பால் விலையை உயர்த்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்துவதாகவும், அதன் மொத்த விற்பனையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பால் தட்டுப்பாடு காரணமாக கொள்முதல் விலை உயர்ந்துள்ளதால் விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் போன்ற பால் நிறுவனங்கள் இன்று முதல் பால், தயிர் விலையை உயர்த்தியுள்ளது. பால் விலை லிட்டருக்கு 4 வரையிலும், தயிர் விலை லிட்டருக்கு 2ம் உயர்த்தியுள்ளது. சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48ல் இருந்து 50 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52ல் இருந்து 56 ஆகவும் கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 60ல் இருந்து 62 ஆகவும், தயிர் லிட்டர் 58ல் இருந்து 62 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் பால் விலை திடீரென உயருவதால் அதனை அதிகமாக பயன்படுத்தும் ஓட்டல்கள், டீ கடைகளில் விலை உயருமோ என்ற அச்சம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சிறிய டீ கடைகளில் ஒரு டீ ₹10க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் பால் விலை உயர்வதால் டீ விலை 12 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. தனியார் பால் விலை உயரும் பட்சத்தில் ஆவின் பாலுக்கு மீண்டும் கடுமையான கிராக்கி ஏற்படக்கூடும். ஆவின் பாலுக்கும் தனியார் பாலுக்கும் விலை லிட்டருக்கு 5 முதல் 10 வரை வித்தியாசம் உள்ளது. ஆவின் நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை நிறம்) ஒரு லிட்டர்  47, சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்) 43, செறியூட்டப்பட்ட பால் (ஆரஞ்சு) 51 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஆவின் நிர்வாகம் இதன் மூலம் வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் கூடுதலாக ஆவின் பால் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என்று பொதுமக்கள் கூறினர்.

தனியார் பால் விலை உயர்வையடுத்து மதுரவாயல், ருக்மணி நகரில் டீக்கடை வைத்துள்ள கடையின் உரிமையாளர் வேல்முருகன் கூறுகையில்: தனியார் பால் விலை இன்று முதல் உயர்ந்துள்ளதையடுத்து டீ, காபி, பால் விலையும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் எங்களுடைய சங்கத்தின் மூலம் பேசி எவ்வளவு விலை உயர்த்தலாம் என்று முறையாக அறிவிப்பு வந்த பிறகு தான் உயர்த்த முடியும். தற்போது சிங்கிள் டீ 10க்கும், காபி 12க்கும் விற்கப்படுகிறது பால் விலை உயர்வையடுத்து டீ, காபி, பால் போன்றவையின் விலை 2 வரை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: