அனுமதியின்றி விலையை உயர்த்த கூடாது தனியார் பால் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: அனுமதியின்றி பால் விலையை உயர்த்த கூடாது என்று தனியார் பால் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் மூன்று முறை லிட்டருக்கு ரூ.8 வரை பால் மற்றும் தயிருக்கான விலையை உயர்த்தி இருந்தது. இந்த நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை ரூ.4 வரை உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனியார் பால் நிறுவனங்களின் பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவில் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் தமிழக மக்கள் அதிக அளவு பாதிப்புக்குள்ளாவார்கள். தனியார் பால் நிறுவனங்களின் தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும். வருங்காலங்களில் அரசு அனுமதியின்றி பால் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்தக்கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அரசு கடுமையான உத்தரவை பிறப்பிக்க வேண்டும். ஏற்கெனவே, பொருளாதார சரிவால் பெரிய தொழில்கள் நஷ்டமடைந்துள்ளன.

அன்றாடம் இல்லங்களில் உபயோகிக்கக்கூடிய பொருட்களின் விலைவாசியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே தனியார் பால் விலையை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அதே வேளையில், ஆவின் பால் கொள்முதலை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: