வெம்பக்கோட்டை அருகே கண்மாயில் கிராவல் மண் கடத்தல்

சிவகாசி: வெம்பக்கோட்டை அருகே மடத்துப்பட்டி கண்மாயில் விதிகளை மீறி கிராவல் மண் கொள்ளை போகிறது. அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா மடத்துப்பட்டி கிராமத்தில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. சுமார் 5 ஏக்கர் பரப்பில்  கண்மாய் அமைந்துள்ளது. கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.  

தற்போது இந்த கண்மாய் தண்ணீரின்றி காணப்படுகிறது.

இதனால் கண்மாயை தூர்வார வேண்டும் என்ற நோக்கில் கிராவல் மண் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. விவசாயிகள் இலவசமாக  வண்டல் மண் அள்ளவும், தனி நபர் கிராவல் மண் அள்ளவும் வருவாய் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அனுமதி பெற்றவர்கள் ஒரு நாள் டிராக்டரில் 7 லோடு மட்டுமே அள்ள வேண்டும். ஆனால் மடத்துப்பட்டி கண்மாயில் இரவு பகலாக கிராவல்மண் அள்ளப்படுகிறது. ஒரு லோடு கிராவல் மண் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிக ஆழமாக தோண்டி மண் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.

கண்மாயை ஆழப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் வருவாய்துறையினர்  வழங்கிய உரிமத்தை, மணல் கொள்ளையர்கள் லாப நோக்கிற்காக பயன்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: