முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு தேவை: அன்புமணி அறிக்கை

சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித்தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மொத்த பணி இடங்களில் 50% இடங்கள் கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள்மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது. அவர்கள் தொடர்ந்து ஊரக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையில்  இந்த சலுகை அளிக்கப்பட்டு வந்தது. அதனால், கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் எந்த தடையுமின்றி கிடைத்தது.

ஆனால், அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை தேவை என்று கூறி, இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமாக முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை இந்திய மருத்துவக் குழு கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது. அதன்பின்னர் ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட போதிலும், அதில் சில குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அத்திட்டத்தை செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்து விட்டது. இதனால் ஊரகங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், ஊரகப் பகுதிகளிலும் முதுநிலை மருத்துவர்களின் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் சிறப்பானதாகும். ஆனால், அந்த நோக்கத்தை எட்டுவதற்கு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவ இடங்களை அதிகரிப்பது மட்டும் போதாது. மாறாக, ஊரகப் பகுதிகளில் முதுநிலை மருத்துவர்கள் தாங்களாகவே முன்வந்து பணியாற்றும் சூழலை உருவாக்குவது தான் தீர்வாக அமையும். முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் அத்தகைய சூழலை ஏற்படுத்த முடியும்

எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புகளில், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் செயல்படுத்த மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், அனைத்து நிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: