தமிழகம், புதுவையில் வறண்ட வானிலை ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும், அதே நேரத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தில் அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் பரவலாக மழை பதிவானது. அவ்வப்போது சில இடங்களில் கனமழை பதிவானது. இதனால் தமிழகத்தில் நிர்நிலைகள் ஓரளவு நிரம்பியது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 10ம் தேதியுடன் முடிந்த நிலையில் அதுமுதல் அதிகாலையில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில் இது மேலும் இரண்டு வாரங்கள் வரை நீட்டிக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழகம், புதுச்சேரியை பொறுத்தவரை நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக புதுச்சேரியில் 4.2 மி.மீ, தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினத்தில் 4 மி.மீ, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 2.4 மி.மீ மழை பதிவானது. இதுதவிர சில இடங்களில் 1 மி.மீட்டருக்கும் குறைவான மழை பதிவானது. நேற்றைய பகல் பொழுதின் அதிகபட்ச வெப்பநிலை 92.5 டிகிரி பாரன்ஹீட் தெற்கு மதுரை பகுதியில் பதிவானது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை நிறைவடைந்துள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்.ஒரு சில இடங்களில் வெப்பசலனத்தால் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 84 டிகிரி பாரன்ஹீட் வரை பதிவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.

Related Stories: