103வது பிறந்த நாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். எம்ஜிஆரின் 103வது பிறந்த நாளையொட்டி நேற்று காலை 10 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.. தொடர்ந்து, ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்தனர். அமைச்சர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்களும் எம்ஜிஆர் சிலைக்கு்ி மரியாதை செலுத்தினர்..

பின்னர் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அங்கு கூடி இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பின்னர் கட்சி அலுவலகத்தில் நடந்த விழாவில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். அமமுக கட்சியில் இருந்து விலகி முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சிலர் அதிமுகவில் இணைந்தனர். இதை தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சட்டப்பேரவை துணை தலைவர், அரசு தலைமை கொறடா, அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். விழாவில் பங்கேற்ற முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் நூல்களை வழங்கி வரவேற்றார். எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், எம்ஜிஆர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, அவர் நடித்த திரைப்படங்களில் உள்ள பாடல்களை ஒலிபரப்பி அதிமுகவினர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.

Related Stories: