உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், எழுமலை, சேடபட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியது. அலங்காநல்லூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையின் காரணமாக மரம் சாய்ந்து விவசாயி பலியானார்.மதுரை மாவட்டம் எழுமலை, சேடபட்டி பகுதிகளான அதிகாரிபட்டி, டி.ராமநாதபுரம், சூலப்புரம், உத்தப்புரம், கோடாங்கிநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி, ராஜக்காபட்டி, எம்.பாறைப்பட்டி, மானூத்து, அல்லிகுண்டம், கணவாய்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு பலமான சூறைக்காற்று வீசியது, சாரல்மழை மட்டும் பெய்தநிலையில் சில இடங்களில் சூறைக்காற்றே அதிகமாக வீசுயது. சில இடங்களில் மட்டுமே பலத்த மழை பெய்தது. இதில் எழுமலை – உசிலம்பட்டி சாலையில் எம்.பாறைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் உள்ள மரம் சாய்ந்து விழுந்தது. இதனால் இந்த சாலை வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரம் என்பதால் மரத்தை அகற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்புத்துறை நிலையஅலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் இப்பகுதியில் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மானூத்து பெத்தனசாமி கோயில் சாலையிலும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதேபோல் இப்பகுதியிலுள்ள அல்லிகுண்டம், பெரியகட்டளை பகுதியில் வீடுகள் மற்றும் தோட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் தகரம், ஓடுகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் இப்பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது.அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே எர்ரம்பட்டி, வடக்கு தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி (55). விவசாயம் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து மழை வருவதற்கு முன்பே பழனியாண்டி தனது 2 மாடுகள், மற்றும் 2 ஆடுகளை பிடித்துக் கொண்டு தனது ஓட்டு மாட்டு கொட்டகைக்குள் சென்றுவிட்டார். தொடர்ந்து மழை பெய்த நிலையில் பழனியாண்டி மாட்டு கொட்டகைக்கு உள்ளேயே அமர்ந்திருந்தார். அப்போது பலத்த சூறாவளி காற்று வீசியதால் மாட்டு கொட்டகைக்கு பின்னாலிருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று மாட்டுக் கொட்டகை மீது வேரோடு சாய்ந்தது. இதில் மாட்டுக் கொட்டகை மொத்தமும் சரிந்து விழுந்ததில் பழனியாண்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் கொட்டகையில் கட்டியிருந்த 2மாடுகள், மற்றும் 2 ஆடுகளும் பலியாயின. பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் புளிய மரம் சாய்ந்து விவசாய பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….
The post உசிலம்பட்டி, அலங்காநல்லூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை-மரம் சாய்ந்து விவசாயி பலி appeared first on Dinakaran.