மதுரை பாலமேட்டில் வீரர்களின் உறுதிமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டுப்போட்டி தொடங்கியது

மதுரை : மதுரை அருகே உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  காலை 8 மணிக்கு தொடங்கிய போட்டிகள்  மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம்  மேற்பார்வையில்,  மாவட்ட ஆட்சியர் வினய்,  தென்மண்டல காவல் துறை ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன்,  தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பார்வையாளர்கள் நின்று ரசிக்க பேரிகார்டுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 936 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். முதலில் கோவில் காளை வாடிவாசலில் அவிழ்த்து விடப்படும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்படும். அதனை பிடிக்க 936 வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு  குழுவாக களம் இறக்கப்படுவார்கள்.

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இந்த குழு மாற்றப்பட்டு, மற்றொரு குழு இறக்கப்படும். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேஷ்டி-துண்டு போன்றவை பரிசாக வழங்கப்பட உள்ளன. ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டுள்ளன.

போலீசார் லேசான தடியடி

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்தனர். அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Related Stories: