அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மனு: அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை எட்டு மணி முதல் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை கிராம மக்களின் அனைத்து சமூகத்தினர் பங்கெடுப்புடன் கூடிய விழாக் குழுவை அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள்,அவனியாபுரம் ஜல்லிக்கட்டினை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் நடத்த உத்தரவிட்டனர். மேலும் மதுரை மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,”தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டு விழாவை அவனியாபுரத்தில் விவசாய சங்கம் சார்பாக நடத்துவது தான் பாரம்பரியமாக இருந்து வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு, மனுவை அவரச வழக்காக இன்று விசாரிப்பதாக உத்தரவிட்டுள்ளது.

* நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம்?

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டை காண பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம். அங்கு போதுமான வசதியின்றி கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் நிலை உள்ளது. எனவே, அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர்கள் அமரும் வகையில் 5 ஏக்கரில் நிரந்தர மைதானமும், கேலரியும் அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் இது குறித்து கால்நடைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலர்கள், மதுரை கலெக்டர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Stories: