வரட்டாறு அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

அரூர்: அரூர் அருகே வரட்டாறு அணையில் இருந்து பாசனத்திற்காக, ஏரிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரூர் அருகே சித்தேரி மலை அடிவாரத்தில் காட்டாற்றின் குறுக்கே, வள்ளிமதுரை என்ற இடத்தில் வரட்டாறு அணை கட்டப்பட்டுள்ளது. 34 அடி உயரமுள்ள இந்த அணையால் கீரைப்பட்டி, அச்சல்வாடி, குடும்பியாம்பட்டி, கூக்கடப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, ஈட்டியம்பட்டி, கம்மாளம்பட்டி, செல்லம்பட்டி, சங்கிலிவாடி உள்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணைக்கு அரசநத்தம், கலசபாடி, காரப்பாடி,  வேலாம்பள்ளி போன்ற மலை கிராம பகுதிகளில் உருவாகும் சிறிய காட்டாற்றில் மழைக்காலங்களில் வரும் தண்ணீரும் இந்த அணைக்கு வந்து சேருகிறது.

அணையின் கால்வாய் மூலம் நேரடியாக 2853 ஏக்கர் நிலமும், ஏரிகளின் மூலம் 2255 மொத்தம் 5108 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெருகிறது. கடந்தாண்டு சரிவர மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. நடப்பாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால், வரட்டாறு அணையில் சுமார் 70 சதவீதத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த அணை முழுதும் நிரம்பினால், விநாடிக்கு 57.29 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, அதன் மூலம் 2033 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறும். அணையின் பிரதான வலது புற கால்வாய் 3.735 கிலோ மீட்டர், கிளை கால்வாய்களின் நீலம் 7.155 கிலோ மீட்டர், அணையில் இருந்து தண்ணீர் கால்வாய் மூலம்  திறந்து விடப்பட்டால் வினாடிக்கு 9.63 கன அடி தண்ணீர் வெளியேற்றம் செய்யப்படும். இதனால் நேரடி விவசாய  820 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.

தற்போது அணையில் தேங்கியுள்ள தண்ணீரை வீணாக்காமல் பாசனத்திற்கு திறந்து விட வேண்டும். அணையில் கால்வாய்களை தூர்வார வேண்டும். வரட்டாறு அணையில் இருக்கும் தண்ணீரை வீணாக்காமல் அருகில் உள்ள ஏரிகள் மூலம், விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீரை திறக்க வேண்டும். நேரடியாக பாசனத்திற்கு திறந்து விடாமல், ஏரிகள் மூலம் தண்ணீர் திறந்து விட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: