ஜிஎஸ்டிஆர்-1 நிலுவை இருந்தால் தாமத கட்டணத்தில் இருந்து தப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டிஆர்-1 படிவம் இதுவரை தாக்கல் செய்யாதவர்கள், தாமத கட்டண அபராதத்தில் இருந்து தப்பிப்பதற்கான அவகாசம் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, வணிகர்கள் மாதந்தோறும் ஜிஎஸ்டிஆர்-1 படிவம் தாக்கல் செய்ய வேண்டும். சுமார் 54 லட்சம் வணிகர்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்து வருகின்றனர். இருப்பினும் பலர் ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்யாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.

இவர்களுக்கு கடைசி மற்றும் ஒரு முறை வாய்ப்பாக, கடந்த 2017 ஜூலை முதல் கடந்த நவம்பர் வரை நிலுவையில் உள்ள ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்வற்கு மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் புதிய சலுகையை வழங்கியது. அதாவது, இதுவரை இந்த படிவம் தாக்கல் செய்யாதவர்கள் ஜனவரி 10ம் தேதிக்குள் தாக்கல் செய்துவிட்டால் தாமத கட்டணம் கிடையாது.

இல்லாவிட்டால், தாமத கட்டணம் அதிகபட்சமாக மாதம் ரூ.10,000 வீதம் வசூலிக்கப்படும். நிலுவை வைத்திருப்பவர்கள் இ-வே பில் உருவாக்க முடியாது. இன்புட் வரி கிரெடிட் பெறும் தகுதியையும் அவர்கள் இழப்பார்கள் என எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், 2017 ஜூலை முதல் கடந்த நவம்பர் வரை நிலுவையில் உள்ள ஜிஎஸ்டிஆர்-1 படிவத்தை தாக்கல் செய்து அபராதத்தில் இருந்து விடுபடுவதற்கான அவகாசம் வரும் 17ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்துள்ளது.

Related Stories: