மதிப்பீட்டு சான்று பெறப்பட்ட 216 எம்சாண்ட் குவாரிகள் பட்டியல் கலெக்டர்களுக்கு அனுப்பி வைப்பு

சென்னை: மதிப்பீட்டு சான்று பெறப்பட்ட 216 எம்சாண்ட் குவாரிகள் பட்டியல் கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், போலி எம்சாண்ட் மூலம் கட்டப்படும் கட்டிடம் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. இதை தொடர்ந்து ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளை கண்டறிந்து அந்த குவாரிகளுக்கு மதிப்பீட்டு சான்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழகத்தில் உள்ள 1200 குவாரிகளுக்கு தனித்தனியாக கடிதம் எழுதியது. அந்த கடிதத்தின் பேரில் தற்போது வரை 216 குவாரிகள் விண்ணப்பித்து மதிப்பீட்டு சான்று பெற்றுள்ளது. ஆனால், அந்த குவாரிகள் குறித்து பொதுமக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்ைல.

இதனால், ஒரிஜினல் எம்சாண்ட் எங்கு கிடைக்கும் என்பது கூட தெரியாமலும் எம்சாண்ட் பயன்படுத்தவும் பொதுமக்கள் அஞ்சும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் கல்யாண சுந்தரம் அனைத்து கலெக்டர்களுக்கும் சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில் ஆற்றுமணலுக்கு மாற்றாக எம்சாண்ட எனப்படும் செயற்கை மணலை ஊக்குவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் எம்சாண்ட் குவாரிகளுக்கு கடிதம் எழுதி மதிப்பீட்டு சான்று வழங்கப்படுகிறது. இந்த குவாரிகளில் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து, எம்சாண்டை பரிசோதனை செய்த பிறகு 9 துறைகளை சார்ந்த வல்லுனர் அடங்கிய குழுவினர் மதிப்பீட்டு சான்று தருகின்றனர்.

மேலும் எம்சாண்ட் தரம் தொடர்பாக புகார் எழுந்தால் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட குவாரிகளில் திடீரென ஆய்வு செய்து, அங்கு தயாரிக்கப்படும் மணலை பரிசோதனை செய்கிறது. அதன் முடிவில், சம்பந்தப்பட்ட குவாரிகள் மீது புகார் உறுதி செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். தமிழக பொதுப்பணித்துறை விதிமுறைக்குட்பட்டு இந்த குவாரிகள் கண்டறியப்பட்டு மதிப்பீட்டு சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த குவாரிகளில் கிடைக்கும் மணல் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே குவாரிகள் தொடர்பான பட்டியலை அனைத்து மாவட்ட கலெக்டர்கள் அலுவலகத்தில் வைக்க வேண்டும். மேலும், கலெக்டர் அலுவலகம் சார்ந்த மற்ற அலுவலகங்களிலும் இந்த பட்டியலை வைக்க அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுவது மட்டுமின்றி ஒரிஜினல் எம்சாண்ட் குவாரிகளில் மணல் பெற ஏதுவாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: