CAA மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு பிரதமர் மோடி மனித உரிமை வழங்கியுள்ளார்: உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

ஆமதாபாத்: நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்தச் சட்டம் விவாதத்திற்கு பின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத  துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி அகதிகளாக 2014ம் ஆண்டு டிசம்பர் 31 வரை இந்தியாவுக்குள் வந்த  இந்துக்கள், சீக்கியர்கள், புத்திஸ்டுகள், சமணர்கள், பார்சிக்கள் மற்றும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக  கருதப்படமாட்டார்கள். மாறாக, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பதே இச்சட்டத்தின் சாரம்சமாகும். இதில் முஸ்லிம்கள் மட்டும் தவிர்க்கப்பட்டனர்.

இதனால் இந்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. நாட்டில் முதல் முறையாக மதத்தின் அடிப்படையில்  குடியுரிமை வழங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியதோடு,. இது இந்திய  அரசியலமைப்பின் அடிப்படையை சிதைப்பதாகும் என்றும் கூறி வருகின்றனர். எனினும், எக்காரணம் கொண்டும் எதிர்ப்புகளுக்கு அரசு பணியாது. இந்த சட்டத்தை அமல்படுத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கமாட்டோம் என்று சமீபத்தில்  உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதன்தொடர்ச்சியாக, குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக நேற்று முன்தினம் இரவு மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் அறிவிப்பாணையை  வெளியிட்டது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆமதாபாத்தில் வசிப்பவர்களால் எழுதப்பட்ட 5 லட்சம் கடிதங்களை பிரதமர் மோடிக்கு அனுப்பும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  உரையாற்றினார். அப்போது, வார்த்தைக்காக மட்டுமல்லாமல் இதயத்தில் இருந்து எழுதப்பட்ட நன்றி கடிதங்கள் இவை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பரப்படும் பொய்களுக்கான பதில் தான் இந்த பொதுக்கூட்டம். மேலும் பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பிரதமர் மோடி, லட்சக்கணக்கான மக்களுக்கு மனித உரிமைகளை வழங்கியுள்ளார்.

இந்திய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை காட்ட முடியுமா? என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு சவால் விடுக்கிறேன் என்றார். தங்கள் மதம் மற்றும்  சுயமரியாதையை காப்பாற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்தியா வருகின்றனர். அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர், முதல்  ஜனாதிபதி, மகாத்மா காந்தி என அனைவரும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு யார் வந்தாலும் குடியுரிமை வழங்கப்படும் என கூறியிருந்தனர்.

பாகிஸ்தானில் இருந்து வரும் ஹிந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள் மற்றும் சமணர்கள் வேறு எங்கும் செல்ல முடியாது என்றும் அமித்ஷா பேசினார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிந்துக்கள் மற்றும்  சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி உறுதியளித்தது. நீங்கள் அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுகிறோம். அதை ஏன் எதிர்க்கிறீர்கள்? இது பற்றி 2006 மற்றும் 2009-ம் ஆண்டுகளில்,  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடிதம் எழுதினார். அதில், ஹிந்துக்கள், சீக்கியர்களை மட்டும் குறிப்பிட்டபோதும், நாங்கள் அதனுடன், பார்சிகள், கிறிஸ்தவர்கள் அனைவரையும் சட்டத்தின் கீழ் உள்ளடக்கியுள்ளோம் என்று கூறினார்.

Related Stories: