தமிழகத்தின் பல இடங்களில் மறைமுக தேர்தல் முறையாக நடத்தவில்லை: மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

சென்னை: தமிழகத்தில் மறைமுக தேர்தல் பல இடங்களில் முறையாக நடத்தவில்லை என்று மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார்  அளிக்கப்பட்டது. திமுக சார்பில் முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் எம்பிக்கள் ஆர்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த வழக்கறிஞர்கள்  என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் தேர்தல்  ஆணையரை நேற்று காலை சந்தித்து புகார் அளித்தனர். தொடர்ந்து டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேனி, ராமநாதபுரம், சேலம், தூத்துக்குடி, திண்டுக்கல்,  திருவண்ணாமலை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள இடங்களில் தேர்தலை நடத்த விடாமல் ஆளுங்கட்சியினர் தகராறு, கலாட்டாவில்  ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சியினர் பார்க்கிறார்கள். சில இடங்களில் தேர்தல் அதிகாரிகள் வரவே இல்லை. தேர்தலை ஆரம்பித்தால் திடீரென நிறுத்த  முடியாது. ஆனால், பல இடங்களில் தேர்தல் அதிகாரி தேர்தலை நிறுத்தியிருக்கிறர்கள். எப்படி நிறுத்த முடியும் என்று தெரியவில்லை. 50  சதவீதத்துக்கு மேல் இருக்கிறார்கள் என்றால் கோரம் இருப்பதாக அர்த்தம். கோரம் இருக்கும் இடத்தில் கூட தேர்தலை நிறுத்தி வைத்துள்ளனர். பல  இடங்களில் அநியாயம், அக்கிரமம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல்  ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். உடனடியாக விசாரிப்பதாக சொல்லியிருக்கிறார். தேர்தல் ஆரம்பித்தால் எந்த காரணத்தை கொண்டும் தேர்தலை  நிறுத்த முடியாது. கோர்ட் நிறுத்தலாம், மாநில தேர்தல் ஆணையர் மட்டும் தான் நிறுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: