டிசம்பர் மாதத்திலும் வாகன விற்பனை கடும் சரிவு: சியாம் தகவல்

* கடந்த டிசம்பரில் கார் விற்பனை 8.4 சதவீதம் சரிந்துள்ளது.

* மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 12.01 சதவீதம் சரிந்துள்ளது.

*  மாதாந்திர, வருடாந்திர விற்பனை விவரங்களை 1997ம் ஆண்டு முதல் (இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம்) சியாம் வெளியிட்டு வருகிறது.

*  இதன்பிறகு கார் விற்பனையில் தற்போதுதான் படு மோசமான சரிவு ஏற்பட்டுள்ளது என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

புதுடெல்லி: கடந்த டிசம்பர் மாதத்திலும் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றால்  ஆட்டோமொபைல் துறை கடும் பாதிப்பை அடைந்து வருகிறது. பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் இந்த துறையிலும், இதை சார்ந்த உதிரிபாக உற்பத்தி, டீலர் ஷோரூம்களில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர்.கடந்த ஆண்டு முழுக்க வாகன விற்பனை ஒவ்வொரு மாதமும் சரிவிலேயே இருந்தது. இந்நிலையில், கடந்த டிசம்பர் மாத வாகன விற்பனை நிலவரத்தை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டு டிசம்பருடன் ஒப்பிடுகையில் 1.24 சதவீதம் சரிந்து 2,35,786 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன. உள்நாட்டு கார் விற்பனை 8.4 சதவீதம் சரிந்து 1,42,126 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 12.01 சதவீதம் சரிந்து 6,97,819 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. மொத்த டூவீலர்கள் விற்பனை 10,50,038. இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பரில் விற்பனை 12,59,007 ஆக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் 16.6 சதவீதம் சரிந்துள்ளது.  இதுபோல், வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 12.32 சதவீதம் குறைந்து  66,622 வாகனங்களும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து விற்பனை 13.08 சதவீதம் குறைந்து 14,05,776 வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

 கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 29,62,052  பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டைவிட இது 12.75 சதவீதம் சரிவு. இதுபோல், அனைத்து பிரிவு வாகனங்களையும் சேர்த்து 13.77 சதவீதம் குறைந்து 2,30,73,438 ஆக உள்ளது என சியாம் தெரிவித்துள்ளது.

Related Stories: