நெல்லை மாநகராட்சியில் 36 அலுவலகங்களில் சோலார் பேனல் மூலம் 253 கிலோ வாட் மின் உற்பத்தி: 10 நாட்களில் துவங்கும் என கமிஷனர் தகவல்

நெல்லை: நெல்லை மாநகராட்சியில் 36 அலுவலகங்களில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 253 கிலோவாட் மின் உற்பத்தி 10 நாட்களில் துவங்கும் என மாநகராட்சி  ஆணையாளர் கண்ணன் தெரிவித்தார். நெல்லை மாநகராட்சி 4 மண்டலத்திற்கு உட்பட்ட 36 அலுவலக கட்டிடங்களில் மின்சார சிக்கன வசதியை கருத்தில் கொண்டு, ரூ.1.87 கோடி மதிப்பீட்டில் 253 கிலோ வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் வகையில் சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்சக்தி பணிகளை ஆணையாளர் கண்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இங்கு உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின் சக்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் வழங்கப்பட்டு அதற்கு ஈடான மின்சாரம் மாநகராட்சி தேவைக்கு பெறப்படும். 10 நாட்களில் சூரிய ஒளி மின் உற்பத்தி தொடங்கப்படும் என ஆணையாளர் தெரிவித்தார்.  

மேலும், நெல்லை டவுன் மாநகராட்சி கல்லணை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ரூ.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடிந்து முடியும் நிலையில் கீழ் தளத்தில் உள்ள 25 கழிப்பறைகள்,  முதல் தளத்தில் 21 கழிப்பறைகள் என மொத்தம் 46 கழிப்பறைகள், பள்ளியைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரை உயர்த்தும் பணிகள், தரைப்பகுதிகளில் பேவர் பிளாக் மூலம் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கூடுதல் கட்டிடப் பணிகளை பார்வையிட்டு பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதலாக 50 கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யவும் உத்தரவிட்டார். மேலும் பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வரும் சூரிய ஒளி மேற்கூரையை ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து, கண்டியப்பேரியில் செயல்படும் நுண் உரம் செயலாக்க மையத்தில் குடியிருப்பு உரிமையாளர்களிடமிருந்து சேகரிக்கும் குப்பைகளை “மட்கும் குப்பை” மற்றும் “மட்காத குப்பை” ஆகியவற்றை தரம் பிரித்து, தயாரிக்கப்படும் நுண் உரத்தினை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் பணியையும், இம்மையத்தில் பணியாற்றும் பணியாளர்களின் செயல்பாடு மற்றும் வருகை பதிவேடு குறித்தும் ஆணையாளர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கண்டியப்பேரியில் உழவர் சந்தையை பார்வையிட்டு  பொறியாளர்களிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர்கள் பாஸ்கரன், சாந்தி மற்றும் சுகாதார அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories: