ஈரான் மீது ராணுவ தாக்குதல்; அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

வாஷிங்டன்: ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் டிரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான தீர்மானம் அமெரிக்க பிரிதிநிதிகள் சபையில் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் போடப்பட்ட நிலையில் 13 பேர் தீர்மானத்தை புறக்கணித்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க படையினரின் ஆளில்லா விமான தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த புரட்சிகர பாதுகாப்பு படை தலைவர் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா- ஈரான் இடையே போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக நேற்று முன்தினம் அதிகாலை ஈராக்கில் உள்ள 2 அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில், 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்த நிலையில், அமெரிக்க வீரர்கள் யாரும் பலியாகவில்லை என அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார். மேலும் ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்க விரும்பவில்லை என்றும் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே, ஈரான் விவகாரத்தில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் உயர் அதிகாரிகள் நாடாளுமன்ற எம்பி.க்களிடம் விளக்கினர். 1973ம் ஆண்டு போர் அதிகார சட்டத்தின்படி, நிர்வாகம் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே பிரதிநிதிகள் சபைக்கு அரசு தெரிவிக்க வேண்டும்.

அதன்படி ரகசிய கூட்டம் நடந்தது. ஆனால், இதில் தங்களின் கவலைகள் குறித்து அரசு எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிருப்தி தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுலைமானியை கொல்ல உத்தரவிட்டது குறித்து முன்கூட்டியே பிரதிநிதிகள் சபைக்கு அதிபர் டிரம்ப் தகவல் தராததால், அவர் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியும், ஈரானுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்துவதை தடுக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகளும், எதிராக 194 வாக்குகளும் போடப்பட்ட நிலையில் 13 பேர் தீர்மானத்தை புறக்கணித்துள்ளனர்.

Related Stories: